செவ்வாய், ஜூலை 13, 2021

பயனற்றுக் கிடக்கும் பாதாளக் கரண்டி

 பேசிக்கொண்டிருக்கும்போதே

பொட்டு பொட்டென்று துளி
உதிரும்
சட்டெனத் தோன்றிவிடும்
அவளுக்கு
வெள்ளிக்கிழமையென்றோ
விளக்குவைக்கும்
நேரமென்றோ
சட்டென சிவந்துவிடாதபடி
பழக்கப்பட்டவை அவள் கண்கள்
**********************************************
பிடிவாதம் என்பாய்
அழுத்தம் அழுத்தம் எனப் பல்லைக்கூடக் கடிக்கலாம்
மறந்துவிடுவதுதான்
இயல்பு என்றால்

நினைவுக்கு என்றொரு மரியாதை இல்லையா
தழும்பைத் தடவிக்கொண்டே சுற்றுவதுதான்
வாழ்க்கையாக இருக்கிறது
நீ கேட்கிறாய் என்பதற்காக
கொசுவைத்தட்டிய
பாவனை செய்யவெல்லாம வராது

*****************************************************************
எனக்குப் பிடித்தவை என்று ஒரு வரிசை எப்படி இல்லாமலிருக்கும்
ஆனால்
அதில் சின்னச்சின்ன திருத்தமோ நகாசோ செய்து எப்போது மாற்றினாய் என்றுதான் தெரியவில்லை
இப்போது
ஒன்றுகூட அடையாளம் தெரியவில்லை
என்னவொரு
அமைதியாகப் பார்க்கிறாய்
கைகளை வேறு கட்டிக்கொண்டு...
அழுத்தி மூடிவிட்ட
கிணற்றுக்குள்
இந்தப் பாதாளக் கரண்டியை எப்படி இறக்குவேன்




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...