செவ்வாய், அக்டோபர் 23, 2018

மழை தொட்டு நகரும் விரல்

ஒரு குழிக்கரண்டி சீனியோ 
பத்தாய் 
இருபதாய் உடைத்த 
அச்சுவெல்லத்துண்டோ கிடைக்கும்
உப்புக்கல் பொதிந்த 
வேப்பிலை உருண்டைக்குப்பின்
கூடவே உள்ளிருக்கும் உப்புக்கல்லோடு 
சமாதானமாகப் பழகு என்றஅறிவுரையும்
அது நடந்தது
எப்போது என்றுதான் புரியவில்லை

********************************************************************
மழைதொட்டபடி நகரும் விரல்களை 
ஏதோ ஒரு முடுக்கில் உள்ளிழுக்கவும் 
உதறவும் கற்றீர்களே
அன்றுமுடிந்த வாழ்க்கை இது
தொட்டகுறை விட்டகுறைதான்
அந்தக் கண்ணில் மின்னல்
மழையோ அதே தாளத்தோடு
****************************************************************
நீங்கள் ஒப்புக் கொள்ளாவிடினும்
உங்கள் சாயல் அதன்விருப்பப்படியே 
வளர்ந்து மலர்ந்து தளர்ந்து நரை கூடிப்போகிறது
குலைதள்ளும் வாழையின் 
திக்கும் உயரமும் பற்றிய கவலையும் உமதே
*******************************************************************
அன்றாடக் கவளத்திற்கு
பிரதியாகக் காக்கை விட்டிருக்கக்கூடும் 
அந்த விதையை
எட்டிப்பார்க்க யாருமிலா மதில்உச்சியில் 
தலையசைக்கிறது ஓரிலை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...