கசந்த நாவைச் சுழற்றியபடி
விடுதலை நாளெண்ணிக் காத்திருக்கும்
ஒருவர் கிடக்க இருவர் இருக்க
மூவர் நிற்க மருத்துவமனை இடங்களில்
குழாய்களொடு கிடக்கும்
95 96 97 என்று சரியான
ஏறுமுகத்தை எண்ணுவதற்காக
ஆக்சிமீட்டரை
அழுத்தி அழுத்திப் பார்த்துக்கொண்டிருக்கும்
நோயர்களுக்கும்
வேதனைமுகங்களையே பார்த்தபடி
வியர்வையில் நனைந்து ஓடும்
கவச உடை கந்தர்வர்களுக்கும்
எங்கிருந்தாவது யாருக்காவது
எதையாவது செய்து
துயரத்துக்கான அழிரப்பர்களோடு
தொண்டு புரி அன்பருக்கும்
பங்கிட்டுத்தர விரும்புகிறேன்
என் பிரார்த்தனை பலன்களை
குலம் கோத்திரம் பாராது
அவர்கள் பக்கம் நின்றால்
உனக்கும் செய்வேன்
அர்ச்சனை சுவாமி பெயருக்கு என்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக