உள்நாக்குவரை தொடும்
கசப்பாயிருந்தாலும்
ஒரு மிடறு தண்ணீர் பருகிப்பார் என்று
அதே நாக்குதான் சொல்கிறது
வாழ்க்கை
எப்போதாவது ஆரஞ்சு மிட்டாய்
நீட்டும்தானே
***********************************************
எப்போதாவது சொல்லிக்கொண்டிருந்த
ஆறுதலை
இப்போதெல்லாம்
ஒவ்வொரு மணிநேரமும்
சொல்ல வேண்டியிருக்கிறது.
உங்கள் வீட்டிலிருந்து அவர் போயிருக்கலாம்
ஆனால் அவர்களுக்குப் பிரியமான ஒன்று
வீட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும்
அதில் அவர்கள் இருப்பார்கள்
என்று ஒருவரிடம் சொன்னேன்
கவிழ்ந்த எண்ணெய்க்கிண்ணத்தைப்போல
பிசுக்கு கூட இல்லாமல்
காலம் துடைத்துவிடும்
என்றா சொல்ல முடியும்
அப்புறம்
இந்த 'காலம்' என்பது நானும் நீங்களும்தான்
என்பதை மறந்தும் சொல்வதில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக