இப்போது என்றில்லை
எப்போதுமே
உன் பார்வைக்கும்
என் பக்குவத்துக்கும் இடையே
தொங்குகிறது ஒரு மாயப்பூட்டு
ஏழு கடல் ஏழு மலைக்கப்பால்
ஒரு கழுகு காத்திருக்கும்
குகைக்குள் கிடக்கும் சாவியைத் தேடிப்போகும் நீ
ஒருமுறை
பச்சைக்கிளி வழி தொலைந்துபோனாய்
அடுத்த பிறவியிலோ
ஏழாங்கடலின் கரையில்
சங்கு பொறுக்கப்போனாய்
இப்படியே
மலைவேம்பின் பழம் உலுக்கி
எண்ணிக்கை தவறி
எட்டாம் மலை ஏறி
என்றே போகின்றன உன் பயணங்கள்
பூட்டுக்கு இந்தப்பக்கம்
கழுகு கழுகு என்று நினைவூட்டியபடியே
நான் காத்திருக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக