வியாழன், டிசம்பர் 09, 2021

இருக்கா இல்லியா

 ஒருநாளைக்கு

ஒருமுறையாச்சும்
வந்துடுது அலுப்பு
என்ன இருக்கு இந்த
சிரிப்பா சிரிச்ச பிழைப்பில
போகிறபோக்கில் யார் வீட்டுக்கொல்லையிலோ
நாலு பச்சை மல்லாட்டையைப் பிடுங்கித்தின்றபடி
நடந்த நாளின் சுவை
தொம்மென்று வாளி விழக் கரகரவென்று
கையெரிய இறைத்து
சண்டையின் ஆத்திரம்தீர
வாரியிறைத்து முகத்திலடித்துக்கொண்ட நீரின் சில்லிப்பு
சுட்ட மாம்பருப்பைக் கிள்ளிக்கிள்ளித் தின்றபடி
துவர்ப்பை வென்ற பொடிநடை
கட்டியாய்த்திங்கப் போதாமல்
கரைத்துக் குடித்த நாளில்
மிஞ்சிக்கிடைத்த சுண்டக்குழம்பைச் சும்மா வழித்துநக்கிச் சப்பிய விரல்கள்
தவணைக்கு வாங்கி கடன்சொல்லித்தைத்து
சீயக்காய் மணந்த ஈரத்தலைவழி நுழைத்துக்கட்டிக்கொண்ட
சின்னாளப்பட்டுப் பாவாடையின் புதுக்கருக்கு
திங்கறதுக்கு வாங்க
எப்பவோ கிடைச்ச ரெண்டுகாசுக்கு
தேன்மிட்டாயா
இலந்தைவடையா
பால்பன்னா
எதை வாங்கறதுன்னு
முழிச்ச யோசனை
ப்ச்
ஏதேதோ இருந்துதான் இருக்குல்ல

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...