கைவிளக்கேந்திய காரிகையை
பாடப்புத்தகத்தில்
படித்தோம்.
வெள்ளுடை தேவதையாக அவரவர்
வீட்டுக்கு விளக்கேற்றுவாள்
என்றுதான் உங்களை அனுப்பினார்கள்.
செவிலியாகி
வந்தபின்
உலகுக்கே விளக்கேற்றுவீர்கள்
என்று நீங்களுமே நினைத்திருக்க மாட்டீர்கள்
ஒரு சுக்குக்கும்
உதவாப் பிறவிகளையும்
ஒன்றுபோலவே காய்ச்சல் பார்த்து ஊசியேற்றி
அனுப்பும் நியாயகன்னிமாரே
நீங்கள்
தள்ளுவண்டிகளின் சக்கரங்கள்
அந்த தலைத்தொப்பிக்குள்தான் உருள்கின்றன
ஒருமுறை மருந்து
ஒருமுறை உணவு
ஒருமுறை சலவை என்று ஏற்றி இறக்கும்
ரோலர் கோஸ்டர்
கொண்டை ஊசிகளால்
பிணைக்கப் பட்டிருப்பதைக் கண்டேன் ஒருநாள்
பரபரப்பாகும்போதெல்லாம்
ஊசிமுனைக் காதுகளுக்குள்
ஒட்டகங்களைக் கட்டி வைத்துவிட்டு
ஒரு வெள்ளை மாத்திரைதான்
மாயாஜாலம் செய்கிறதென நம்ப வைக்கிறீர்கள்
சட்டதிட்ட சதுரங்களுக்குள் வாந்தி எடுக்கும்
சந்தர்ப்பங்களையும்
வழித்துப்போட்டு
நாற்றமின்றி உலகை வைத்திருக்கும் உங்களைவிட்டால்
கதியேது உலகுக்கு
நற்றாய்
செவிலித்தாய் பாடிய சங்கமெல்லாம்
இப்போது கண்டுகொண்டது
செவிலித்தாய்தான்
நற்றாய் என்று
உலகம் ஒரு காதலனைப்போல
முட்டி போட்டு உங்களிடம் ஒற்றைரோஜாவை
நீட்ட விரும்புகிறது
நீங்களோ
இப்போதும்
எட்டாம் நம்பர் இருமுகிறது
என்று ஓடுகிறீர்கள்
உலகம்
ஒரு தகப்பனைப்போல
ஆதுரத்துடன்
தோளணைக்க விரும்புகிறது
நீங்களோ
ஆக்சிமீட்டர்களை
ஏந்தியபடி
அலைபாய்கிறீர்கள்
வார்டுகளுக்குள்
நில் எழுந்திரு
உட்கார் படு
போ வா என
ஒலித்துக் கொண்டேயிருக்கும்
கட்டளைகள்
கவச உடையெனும்
நெருப்புக் கிடங்கிலிருந்து
விழுவதை உணர்பவன் பெரு மூச்சு
விட்டுக் கொள்கிறான்
சுய மூச்சோடு இருக்கிறோமென்று
எல்லாம் தாண்டியும்
உலகம் மிச்சமிருந்தால்
மதுரைவீரன்
மாரியம்மன் போல
மருத்துவ பொங்கலும்
குலவழக்காகலாம்
செவிலி அம்மனும்
சிலைகளாய் இருக்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக