திங்கள், அக்டோபர் 05, 2020

உடைமை வினோதங்கள்

 

ஒரு சின்ன சந்தோஷத்தைத் தர முடிந்தது
எதனால் என்றெல்லாம் தெரியவில்லை
என்னைப் பார்த்ததும் 
சிரிப்பில் கண் இடுங்க நீ பார்த்தது
அந்த அடுக்கு நந்தியாவட்டை
முதல் பூ பூத்தது போல

எனது கண்ணுக்குள்
உன்னால் சிரிப்பை உணர முடிந்திருக்கிறதோ

******************************************************** 

நீ இப்படித்தான்
சொல்வாய் என்பதற்காக
நானும்
அப்படியே செய்ய வேண்டுமா என்ன
ஒருபோதும்
சற்றுமுன்
அமர்ந்த கிளையில்
அமராத குருவியை
நீ கண்டதில்லையோ 

***********************************************************

 மறந்து போய்விட்டது
எத்தனையாவது முறையாக
நீ
வீசி எறிகிறாய் என

எண்ணிக்கையில்
என்ன இருக்கிறது

*****************************************


நீயும் நீயும்
இருப்பீர்கள் என்பதற்காக
நான் எங்கு போக
*********************************************


காரை உதிர்ந்த சுவரில்
மழை ஈரம் இறங்குவது சிறு பொழுது
பிறகென்ன எப்போதும்போல்
பொருக்கு உதிர்த்துக்கொண்டு 
கிடக்க வேண்டியதுதான்

******************************************** 

இப்போதுதான் தெரிய வந்தது போலவும்
இப்போதுதான்
தெரிவித்தது போலவும்
பாவனை செய்ய இருதரப்பும்
தயாராகி விட்டால்
தராசை எடுத்துக்கொண்டு கிளம்பு
அசட்டுச் சிரிப்பு
ஆரோக்கியக்கேடு
******************************************************

 புத்தரின் தலையை ஏன்
இத்தனை பெரிதாகச் செய்தார்
சின்ன முழங்காலில் தாங்க முடியாதே
தவிப்பாகிறது
காணுந்தோறும்
உடையும் வரை
உடைமையாக இருப்பதன் வினோதங்கள்

 

 

கருத்துகள் இல்லை:

வாழ்வின் சந்நிதானத்தில்

  கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர ********************************...