வெள்ளி, அக்டோபர் 02, 2020

தவதாயப்பட்ட பிழைப்பு

 

என் வாசலில் எப்போதிருந்து நிற்கிறாய்
ஏனிப்படி செய்தேனென்று 
எனக்கு விளங்கவில்லை

கதவு அளவு பெரியதாக இல்லாவிடினும்
ஒருசன்னல் அளவாவது
திறப்பு இருக்கிறதென்று
நினைத்துக் கொண்டுவிட்டேன்

உன்னைக் காணோம் காணோமென்று
தவதாயப்பட்டுக் கிடந்தபோதாவது
வாயிலை எட்டிப் பார்த்திருக்கலாம்
இதென்னவொரு அநியாய அத்துவானம்

வாசலில் யார்
பாரென்று அழைத்துச்சொல்ல
ஒரு அடுத்த ஆள் இல்லாத கோரம்

உனக்குத்தான் என்னவொரு அமுக்கு
வந்து நிற்கிறேன்
வெளியே வா
என ஒரு குரல் கொடுக்க மாட்டாயா
ம்
இப்போதுமென்ன செய்ய
திறப்பில்லாத வாயிலுக்கப்பால் நிற்கும்
உனை ஆரத் தழுவி விரல் கோர்க்க
வழியில்லை
உடைக்க உனக்கு மனமில்லை
எனக்கு வலுவில்லை

நைச்சியப் புன்னகையோடு நகர்ந்தாயா
தளும்பிய கண்ணீரைச் சுண்டிவிட்டு 
கடந்தாயா எனச்சொல்லவும் 

நீதான் வரவேண்டும்

 

 

 

 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...