திங்கள், அக்டோபர் 05, 2020

வீட்டுத்துணுக்கு

 

அச்சொட்டாக
வாடாமல்லியை வரைந்த சீலை
அசையுந்தோறும்
வேரைக் கேட்கிறது
ஒரு சுருக்கில்
கட்டும் சூட்சுமம்
அறி

************************************** 

ஆண்டாண்டு காலமாய்
நீரிறைத்த கிணற்றை
திசை 
சரியில்லையென்று
தூர்த்தோம்
கடைசியாய் ஒருமுறை
பாதாளக்கரண்டியைப் போட்டுப்பார்த்தேன்
வேறெப்போதும் கிடைக்கப்போவதில்லையே
விழுந்த வீட்டுத்துணுக்கு

********************************************

 ஈரக்கிழங்கு மணத்துடன் ஒரு சிரிப்பு
இரண்டு நட்சத்திரத்தை 
எடுத்துக்கொண்ட பார்வை
எதனாலும் சகிக்கவில்லை
உன்
புழுநெளியும்
சொல்லை
***********************************************

 தொட்டில் சீலையின்
பூ
அம்மா மடியோ என மயக்கம்
பொக்கைவாய் பார்த்து
தானாய்ச்சுற்றுகிறது
குறுக்குக் கட்டையின் பொம்மை

 ******************************************************

 ஒரு கொக்கி இருந்திருக்கிறது
உன் சொல்லுக்கும்
என் செயலுக்கும்
உன் இருப்புக்கும்
என் நினைப்புக்குமாக
துருப்பிடித்திருப்பதைப் பார்த்தால்
எடுத்து விட்டு விடலாம்
***************************************************** 

சொட்டுச்சொட்டாய்
காப்பி வடிநீர் இறங்கிக்கொண்டிருக்கிறது
காலையும்
மாலையும்
மீண்டும்
காலையும்
மாலையும்
கொதிநீர்ச்சூட்டுக்கு
அலுத்துக்கொள்ளாத வாழ்க்கை
மணம் மணம் என்று
சொல்லிக்கொள்ளுங்கள்

 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...