வெள்ளி, அக்டோபர் 02, 2020

காக்கா கடிக்குக் காத்திருக்கும் துயரம்

 

சொல்வதற்கென்று எதையும்
எடுத்து வைத்திராத பொழுதுகளில்
கை நீட்டாதே
நீர்வற்றிய நடுக்கம் வந்துவிடுகிறது
பொறுத்திரு
இருக்கட்டுமே 
இப்படியும் ஓர் உலர்பொழுது

**********************************************

சிறு கொப்புளத்தை நான் கட்டி
எழுப்பவில்லை
ஆனாலும் முனை முகம் பார்க்கிறது

***************************************************

 கண்ணுக்குள் பிரகாசத்தை 
வைத்தவன் எவனோ
அவனே என் பூமியில்
சூரியனை 
ஏற்றியவனாவான்
ஆமென்

**************************************

 ஒரு காக்கா கடி
கடித்தாவது
உன் துயரத்தைக் கொடு
துவர் கொய்யா போல
மென்று துப்புகிறேன்
சரி
அதற்குமுன்
அதைச் சீலைக்குள்
சுற்றிக்கொடு

***********************************

பகலில் இருள்போலவும்
இருளில் பகல்போலவும்
பிறழ்ந்து கிடக்கும்
வாழ்வின் காதைப்பிடித்து 
திருகலாம் போலிருக்கிறது
ஆமாம்
காது எது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...