வெள்ளி, அக்டோபர் 02, 2020

அம்மாவாக இருப்பதற்கே அம்மா பிறக்கிறாள்

 எல்லோர் குறிப்புமறிய கற்பதுதான்
அம்மாவின் அரிச்சுவடி
குறிப்பாகக் கூட
அவள் குறிப்பு
அந்த பாடத்திட்டத்தில் கிடையாது

******************

தன் அம்மாவின் முகத்தையே
பொருத்திக் கொள்ளும் அம்மாவுக்கு
குறைந்தது இருபதாண்டை

விழுங்கிய
ஜீரணக்கோளாறு இருக்கலாம்

******************

மாதவிடாய்க்கறையை உறிஞ்சிவிடும்
நாப்கின்களில் இருந்து
அம்மாக்களுக்கு சக்தி உள்ளிறங்க
வழியுண்டா

தேவைப்படுகிறது
அம்மாவாய் இருக்க

****************

 அம்மாவுக்கு ஒன்றும் தெரியாது
யார் அம்மாவுக்கு
உன்,என்,எல்லா அம்மாவுக்குந்தான்

****************

அம்மாவின் அன்பு
தூர இருக்கும்போதோ
தொலைந்து போகும்போதோ 
மட்டும் மணக்கும்

***"*************

அம்மாவுக்கு வரும் ஆசைகள்
அபத்தமாகவும்
அம்மாவின் தேவைகள்
அற்பமாகவும் அமைவதுதான் எப்படி

***************"***

அம்மாவின் பிள்ளைகளாக
வளருமுன்
பிள்ளைகளின் அம்மாவாக 
அவள் அடையாளம் மாறிவிடுகிறது

******************

 உங்கள் ஆடைகளின் பாக்கெட்டுகளில் 
நிரம்பி இருப்பதெல்லாம் 
அம்மாக்கள் சிந்திய
அசட்டு சிரிப்பின் துண்டுகள்

மகள்களின் கைப்பைகளில்
அடிமூலையில்
நிச்சயம் அவ்வப்போது சிந்திய
சளித்துணுக்கு படிந்திருக்கும்

*******************************************************

 ஏதாவதொரு திருப்பத்தில் 
வண்டி குலுங்கும்போது 
நீங்கள் அதிர்வீர்கள்
முன்பின்னாக இடித்துக் கொள்வீர்கள்
நழுவி விழக்கூட நேரும்
அம்மாக்களுக்கு 
அவை அனுமதிக்கப்படுவதில்லை

அவள் அப்போதும்
மகவை முந்தானையால் பொத்திக்
கரைசேர்த்துவிட வேண்டும்

உதிரிப்பூக்களோடு
உலகம் தயாராக இருக்கும்

 

 

கருத்துகள் இல்லை:

வாழ்வின் சந்நிதானத்தில்

  கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர ********************************...